நடிகர் சிங்கம்புலி பல திரைப்படங்களில் உதவி இயக்குனர், கதை ஆசிரியர் மற்றும் இயக்குனராக இருந்தாலும் இதுவரைக்கும் காமெடி நடிகராகவே நடித்து வந்த நிலையில் முதல் முறையாக மகாராஜா திரைப்படம் மூலம் தான் வில்லன் அவதாரம் எடுத்தார். இது ஒரு பக்கம் பாராட்டுக்களையும் மற்றொரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகியது. நடிகர் சிங்கம் புலி பிதாமகன் மற்றும் நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ரெட், மாயாவி போன்ற திரைப்படத்தை இயக்கவும் செய்தார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு கிடைக்க தொடங்கியது. அந்தத் திரைப்படத்தில் ஒரு குழந்தை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கம் புலி யாராலும் மறந்து இருக்க முடியாது.

அதிலும் தன்னுடைய அப்பாவான ஜி எம் குமாரிடம் அப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே என்று கேட்பது, பிறகு எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே நீங்க எல்லாம் மாடு முட்டி தான் சாகப் போறீங்க என்று சாபம் கொடுப்பது போன்று பல இடங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. அதன் பிறகு நடித்த படங்களில் எல்லாம் சிங்கம் புலி காமெடி கேரக்டரிலேயே நடித்து வந்திருந்தார். ஆனால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் தான் அவர் பாலியல் வன்புணர்வு செய்பவராக நடித்திருந்தார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்தது. தற்போதும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
![]()
இந்நிலையில் சிங்கம் புலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் மனைவி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், நான் மொத்தம் 162 படங்கள் நடிச்சிருக்க அதுல 130 படங்கள் வெளியாகி உள்ளது. அதுல ஒரு மூணு படத்தை தான் என்னுடைய மனைவி பார்த்திருப்பாங்க. எந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் நான் எதுக்கு நீங்க போயிட்டு வாங்க என்றுதான் சொல்லி அனுப்புவாங்க. என்னுடைய மனைவி ஆர்மியில் கர்னலாக இருக்கிறார். நான் கல்யாணம் முடிக்கும் போது கேப்டனாக இருந்தார். பிறகு மேஜரானார். தற்போது கர்ணலாக பணியாற்றி வருகிறார். அங்கு வேலை பார்த்துக் கொண்டே என்னுடைய இரண்டு குழந்தைகளையும் அவர்தான் கவனித்துக் கொள்கிறார். நான் இத்தனை படங்களில் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய திறமையெல்லாம் கிடையாது இயக்குனர்களும் சக நடிகர்களும் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்று சிங்கம் புலி எமோஷனலாக பேசியுள்ளார்.
