அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேர் பயணித்த நிலையில் ஒருவர் உயிர்த்தப்ப மற்ற அனைவருமே உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அங்கிருந்த மருத்துவ விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

இப்படியான நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் பன்ஸ்வாராவை சேர்ந்த மருத்துவர்கள் பிரதீக் ஜோஷி (45), அவருடைய மனைவி கோமி வியாஸ் (40) மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் என ஐந்து பேரும் உயிரிழந்த சம்பவம் பெறும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தங்களுடைய குழந்தைகளுடன் லண்டனுக்கு பயணித்த போது விமானம் விபத்துக்குள்ளானது. உதைப்பூரில் பணியாற்றிய இந்த குடும்பம் புதிய வாழ்க்கைக்காக இங்கிலாந்து சென்று கொண்டிருந்தது. அவர்களுடைய கனவை சாம்பலாக்கும் வகையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது பலருடைய மனதையும் கலங்க வைத்துள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு குடும்பத்துடன் செல்பி எடுத்து அதை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அடுத்த நொடி நிச்சயம் இல்லா வாழ்க்கை இதுதானா என அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
