கிழக்கு சின்ஜியாங் மாகாணத்தின் பாலைவனப் பகுதியில், சீனா தனது மிக நீண்ட தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகளை வைத்துள்ள நிலத்தடிச் சேமிப்புக் கிடங்குகளுக்கு அருகே, மாபெரும் ராணுவ உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருவதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. இங்குள்ள ‘ஹாமி’ அணுஆயுத ஏவுகணைக் கிடங்குகளுக்கு அருகே சீனா நூற்றுக்கணக்கான புதிய ஏவுதளங்கள், கவசப் பாதுகாப்பு பங்கர்கள், அதிநவீனத் தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் நடமாடும் ஏவுகணை வாகனங்களை நிறுத்துவதற்காக 80-க்கும் மேற்பட்ட பிரத்யேக கான்கிரீட் தளங்களை அமைத்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் ஹாமி ஏவுகணைக் கிடங்கில் இருந்து முறையே 140 கி.மீ மற்றும் 230 கி.மீ தொலைவில் இரண்டு மாபெரும் அஷ்டகோண (Octagonal) வடிவ ராணுவ மையங்களை சீனா கட்டமைத்துள்ளது. இந்த அஷ்டகோண அமைப்புகளுக்குள் ராணுவ வீரர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள், பிரம்மாண்ட ராணுவ வாகனங்களை நிறுத்தும் இடங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட ஆயுதக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர காலப் பயன்பாட்டிற்காக இந்த மையங்களுடன் ஏர்ஃபீல்டுகள் மற்றும் ரயில் பாதைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ரகசியப் பாலைவனத் தளங்களில் சீனா மின்னணு போர்முறை, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் அதிநவீனக் கட்டளை செயல்பாட்டு மையங்களை அமைத்து வருகிறது. சீனா தனது நிலத்தடி அணுஆயுத ஏவுகணைகளை அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும், அவசரக் காலத்தில் உடனடியாகத் திருப்பித் தாக்கவுமே இந்த கடினமான விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா தனது அணுஆயுதக் கட்டமைப்பை மிக வேகமாக நவீனமயமாக்கி வருவது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
