நிஜமாகவே மாறிய ஹாலிவுட் படம்!.. ராஜஸ்தானில் திடீரென உருவான ‘மரண’ புழுதிப் புயல்… மூச்சு விட முடியாமல் தவித்த பொதுமக்கள்.. . இணையத்தைக் கலக்கும் பகீர் வீடியோ..!!

By Muthu Mani on வைகாசி 31, 2026

Spread the love

ஹாலிவுட் திரைப்படங்களிலும் யூடியூப் வீடியோக்களிலும் மட்டுமே நாம் பார்த்து மிரண்ட பிரம்மாண்ட புழுதிப் புயல், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நிஜமாகவே அரங்கேறி ஒட்டுமொத்தப் பகுதியையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ராஜஸ்தானின் சுரு (Churu) மற்றும் பிகானேர் ஆகிய பகுதிகளில் இன்று திடீரெனப் பயங்கரமான புழுதிப் புயல் தாக்கியது. அங்கிருந்த செல்போன் டவர்களை விட பல அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் படலம், ஒட்டுமொத்த வீடுகளையும் சூழ்ந்துகொண்டது. இதனால் எதிரே வரும் நபர்கள் கூட தெரியாத அளவிற்குப் புகைமண்டலமாக மாறியதால், பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் கடுமையாக அவதிப்பட்டனர். மார்க்கெட் மற்றும் கடைகளில் இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குள் பதுங்கினர்.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவி வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பார்ப்போரைக் கண்முன்னே மிரள வைத்துள்ளன. இந்த மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு, அம்மாநில மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை (Warning) விடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, ராஜஸ்தானின் பிகானேர், ஜெய்ப்பூர், அஜ்மீர், கோட்டா, ஜோத்பூர் உள்ளிட்ட முக்கிய கோட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வழக்கத்தை விடக் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தத் திடீர் வானிலை மாற்றத்தால் அடுத்த 5 நாட்களுக்குப் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 44°C-க்கு கீழாகவே இருக்கும் என்பதால், வெப்ப அலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.