திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டி பகுதியில் இரவு நேர விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை நடுவே உள்ள தடுப்புகளில் ‘ரெஃப்ளெக்டர்கள்’ பொருத்தப்பட்டன. வாகன வெளிச்சத்தைப் பிரதிபலித்து ஒளிரும் இந்த சாதனங்கள், ஓட்டுநர்களுக்குச் சாலையில் தடுப்பு இருப்பதைக் உணர்த்தி பாதுகாப்பை உறுதி செய்து வந்தன.
இந்நிலையில், அப்பகுதி வழியே சென்ற ஹரியானா மாநிலப் பதிவெண் கொண்ட லாரியின் ஓட்டுநரும் கிளீனரும், பகல் நேரத்தில் யாருக்கும் அஞ்சாமல் இந்த ரெஃப்ளெக்டர்களைப் பெயர்த்து எடுத்துத் தங்கள் லாரியின் பின்பகுதியில் அலங்காரத்திற்காகப் பொருத்தியுள்ளனர். பொதுப் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பொருளைத் திருடுகிறோம் என்ற எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இன்றி அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் தன் கைபேசியில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிடவே, அது தற்போது வைரலாகி வருகிறது. இரவில் அனைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கும் உதவும் சாதனத்தைத் திருடிய வடமாநில லாரி ஊழியர்கள் மீது நெடுஞ்சாலைத் துறையும் காவல்துறையும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
