சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்பவரின் 9 வயது மகன் தருண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பூங்கொடியுடன் தொடர்பில் இருந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வீட்டில் இருந்த சமயத்தில், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதைக் கண்ட தமிழ்ச்செல்வன் அங்கிருந்து தப்பியோட, மயக்க நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் தருண் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வு அறிக்கையின்படி, சிறுவன் தருண் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வனை போலீஸார் வலைவீசித் தேடி வருவதுடன், பெற்ற தாயான பூங்கொடிக்கு இந்தக் கொலையில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
