துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திடீரென இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த கேப்டனைக் கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது நடந்த இத்தாக்குதலால் விமானம் ஒரே நிமிடத்தில் 17,000 அடிக்குக் கீழே சரிந்து தறுமாறியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் இந்தியக் கேப்டன் மற்றும் விமானத்திலிருந்த கூடுதல் விமானிகள், பயணிகள் இணைந்து தாக்குதல் நடத்திய துணை விமானியைப் போராடி அடக்கினர்.
இதனைத் தொடர்ந்து விமானம் அவசர நிலையை அறிவித்து சவூதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. கத்திக்குத்துக்கு உள்ளான இந்தியக் கேப்டன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்தியக் கேப்டனின் தைரியமான செயலையும், அவருக்கு உதவிய பயணிகளையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
