உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த 27 வயதான புகைப்படக் கலைஞர் ஆலோக் குப்தா ஆகஸ்ட் 11-ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளைச் சோதித்தபோது, ஆலோக்கின் நண்பர்களான சுபம் திவாரி, சுபம் யாதவ் மற்றும் அங்குஷ் யாதவ் ஆகியோர் ஆலோக்கின் வீட்டில் இருந்து ஒரு பெரிய நீல நிறப் பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
ஆலோக்கிற்குச் சுபம் திவாரி கொடுக்க வேண்டிய கடன் பணத்தைத் திருப்பிக் கேட்காமல் தவிர்க்கவே இந்த கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆலோக்கை அடித்துக் கொன்ற கும்பல், 16 மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடலை நீல நிறப் பையில் அடைத்து, காரில் எடுத்துச் சென்று பக்கத்து மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் வீசியுள்ளது.
மேலும் ஆலோக்கின் ஐபோன் மற்றும் விலையுயர்ந்த கேமராக்களைக் கொள்ளையடித்த சுபம் திவாரி, ஆலோக் உயிருடன் இருப்பது போல் காட்டுவதற்காக அவரது ஐபோனில் இருந்து காதலிக்குத் தொடர்ந்து 20 நாட்கள் குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். காதலி வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்ய முயன்றபோது அதை ஏற்காததால் சந்தேகம் வலுத்து, இறுதியாகக் காவல்துறையினர் இந்த கொடூரக் கொலையைக் கண்டுபிடித்துள்ளனர்.
