அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்கும் மத்தியஸ்தராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் கோரிக்கையின் பேரில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இதில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக அறிவித்தார். இந்த முக்கிய பேச்சுவார்த்தை பட்டியலில் பாகிஸ்தானின் பெயரை அவர் முற்றிலும் தவிர்த்துவிட்டதால், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே பாகிஸ்தானின் நடுநிலைமை மீது சந்தேகம் கொண்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. சீனாவிடமிருந்து ஈரானுக்கு ராணுவத் தளவாடங்கள் சென்று சேரப் பாகிஸ்தான் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிப்பதாக வெளியான் தகவல்கள், அதன் நம்பகத்தன்மையைப் பெருமளவில் பாதித்துள்ளன. இதனிடையே, அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்குக் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு இதுவே என்றும், இதனைப் பயன்படுத்த தவறினால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
