லண்டனில் லெஸ்டர் ஸ்கொயர் என்பது புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு சீன்ஸ் இன் தி ஸ்கொயர் என்ற பெயரில் பிரபல நட்சத்திர நடிகர்கள் மற்றும் அவர்களது கேரக்டர்களின் சிலைகள், திரைப்பட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மிஸ்டர் பீன் பேட்மேன் ஹாரிபாட்டர் உட்பட பல கதாபாத்திரங்களின் சிலைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே என்ற இந்தி படத்தில் நடித்த ஷாருக்கான் – கஜோல் ஆகியோரின் கேரக்டர்களின் வெண்கல சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டில் 4 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் ரூ. 102 கோடிக்கு மேல் வசூலித்தது. தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் தினமும் ஒரு காலை காட்சி அல்லது பகல் காட்சியாக திரையிடப்பட்டு வந்தது. ஷாருக்கான் கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் 30 ஆண்டுகளை தற்போது நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான் – கஜோல் ஜோடியாக நிற்கும் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் முதல் இந்திய பட உலோக சிலை இதுதான். இந்த சிலையின் திறப்பு விழாவில் ஷாருக்கான் கஜோல் கலந்துக்கொண்டனர். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
