“18 ஹார்ட் டிஸ்க் மாயமா? 38 எங்கே இருந்தது?”…. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் வெடித்த செந்தில் பாலாஜி…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அரசு மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை குறித்துப் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் உள்நோக்கம் காரணாமாகவே இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். திமுக செயற்குழு கூட்டத்தைக் கூட புறக்கணித்து சட்டப்படி இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டசபை நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய அவையில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் ஆளும் தரப்பு கூச்சல் குழப்பத்தை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார். மின்சாரத்துறையில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாகக் கூறிவிட்டு, பின்னர் 38 ஹார்ட் டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவது முரணாக உள்ளது என்றும், அந்த கூடுதல் 20 ஹார்ட் டிஸ்க்குகள் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அரசு தரப்பில் சரியான பதில் இல்லை என்றும் சாடினார்.

   

அவை நடவடிக்கைகளின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் மின்சாரத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள தரவுகளுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருப்பதாக செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டினார். மின்சாரத் துறையின் கடன் சுமை குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் அதே வேளையில், திமுக ஆட்சியில் பணிகளே நடக்கவில்லை என்பது போல் ஒரு போலித் தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். சட்டசபையில் உரிய பதில்களை அளிக்கத் திராணி இல்லாமல், குதர்க்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவையை நடத்தி வருவதாகவும் சாடினார்.

   

மேலும், எதிர்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதிலேயே இந்த அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும், இன்னும் பல வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டது போல் கைவசம் உள்ள ஆவணங்களை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கும் பயனில்லாத ஒரு அரசாகவே இது செயல்பட்டு வருகிறது எனத் தனது விமர்சனத்தை நிறைவு செய்தார்.