அண்ணாமலையின் அடுத்த மெகா ஸ்கெட்ச்…. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து இறக்கிய ‘3 மாத மாஸ்டர் பிளான்’….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’ இயக்கம், சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரத்தையும், ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளையும் வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று மாதங்களுக்கான தீவிரச் செயல்பாட்டுத் திட்டங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் மாதத்தில் ‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல்’ என்ற முதன்மை நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற பொது இடங்களைக் கண்டறிந்து சரிசெய்தல், பயணங்களின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அவசரகால உதவிகளைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைதல், சமமற்ற பொருளாதார வாய்ப்புகளைச் சீரமைத்தல் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துதல் ஆகிய ஐந்து முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

   

தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் ‘இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்’ என்ற தலைப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், தெளிவற்ற பயிற்சி முறைகளைச் சீரமைத்தல், முறையான வழிகாட்டிகளை (Mentors) அமைத்துத் தருதல், சான்றிதழ் இல்லாத தனித்திறன்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருதல் மற்றும் வேலை வழங்குநர்களுடன் இளைஞர்களை நேரடியாக இணைத்து முதல் வேலைவாய்ப்பைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிரமங்களைப் போக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

   

நவம்பர் மாதத்தில் ‘பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்துதல்’ என்ற பெயரில் கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற நிர்வாகத்தில் மக்கள் பங்களிப்பை அதிகரித்தல், உள்ளாட்சிப் பொறுப்புகளில் உள்ள தெளிவற்ற தன்மையை நீக்குதல், நிர்வாகத் தரவுகளை எளிதாகப் பெறுதல், முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொய்வின்றிச் செயல்படுத்துதல் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது. துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் இத்திட்டம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டு, அதிகப்படியான மக்களை ஒரே அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.