“10-ம் வகுப்பு ஃபெயில்.. ஆனால் 2 ஆம்னி பஸ், 4 சொகுசு கார்கள்”…. குமரியை உலுக்கிய ஜெனிஷின் திடுக்கிடும் ‘காதல் வலை’….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜெனிஷ் என்ற வாலிபர், பெண்களை ஏமாற்றி நகை மற்றும் பணத்தைப் பறித்த குற்றத்திற்காகப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வரும் இவருக்குத் திருமணாமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில், சோசியல் மீடியா மற்றும் ஆடம்பர வாழ்க்கை மூலம் பல பெண்களைத் தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். தன்னைத் திருமணமே ஆகாத மிகப்பெரிய தொழிலதிபர் போலக் காட்டிக்கொண்டு, அரசு ஊழியர்களின் மகள்கள், வசதியான வீட்டுப் பெண்கள் மற்றும் கணவன் வெளிநாட்டில் உள்ள பெண்களை மட்டுமே குறிவைத்து இந்த மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

ஜெனிஷின் ஏமாற்று மாடல் மிகவும் விசித்திரமானது; ஆரம்பத்தில் தொழில் முதலீடு எனக் கூறிச் சிறிய தொகையைக் கடனாகப் பெற்று, அதைச் சொன்ன தேதிக்கு முன்பே திருப்பிக் கொடுத்துப் பெண்களின் நம்பிக்கையைச் சம்பாதிப்பார். பின்னர், பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்து மிரட்டியும், காதலைப் பயன்படுத்தியும் நகைகளைப் பறித்து எஸ்கேப் ஆகிவிடுவார். அந்தவகையில் புதுக்கடைப் பெண்ணிடம் 26 சவரன் நகையும், களியக்காவிளைப் பகுதியில் வெளிநாட்டு வாழ் நபரின் மனைவியிடம் 47 சவரன் நகையும் பறித்துள்ளார். லேட்டஸ்டாக 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மிரட்டி, அவரது வீட்டில் இருந்த 140 சவரன் நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை ஒரே அடியாகச் சுருட்டியுள்ளார்.

   

இப்படி ஒரே வருடத்தில் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தைக் கொண்டு, ஜெனிஷ் 2 ஆடம்பர ஆம்னி பஸ்கள், 4 சொகுசு கார்கள் மற்றும் தனது சவுண்ட் சர்வீஸ் தொழிலுக்குத் தேவையான நவீன ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த ஜெனரேட்டர்களை வாங்கி எக்கச்சக்கமாக முதலீடு செய்து திடீர் கோடீஸ்வரராக மாறியுள்ளார். மாணவியின் வீட்டில் நகை மாயமானது குறித்துப் பெற்றோர் விசாரித்தபோதே இந்த அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் ஜெனிஷ் மீது போக்சோ உட்பட 3 வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது சிறையில் அடைத்தனர்.

   

10-ஆம் வகுப்பில் தோற்ற இந்த வாலிபர், கடந்த ஒரு வருடமாகவே இந்த மோசடி வேலையில் தீவிரமாக இறங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஜெனிஷிடம் இருந்து அவர் மோசடியாகச் சம்பாதித்த ஆம்னி பஸ்கள், கார்கள் மற்றும் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல பெண்கள் இவனிடம் ஏமாந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், ஜெனிஷைக் காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.