சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். வேலை நிமித்தமாக உருவான தொடர்பைப் பயன்படுத்தித் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனது அலுவலகத்திற்கு வரவழைத்து சுமார் 3 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அச்சுறுத்தியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கணவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி பி.ஆர். சுந்தரின் மனைவி மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர் மீதும் காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பங்குச்சந்தை வர்த்தக ஆலோசனைகளை வழங்கி மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்த ஒருவர் மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் வழக்கு விசாரணை கட்டத்தில் இருப்பதால் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
