தமிழ் சினிமாவில் தனக்கென தனது தனித்துவமான படங்களின் மூலம் ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. ஆனால் அந்த படம் அவரின் தந்தையின் பெயரில் ரிலீஸ் ஆனது.
அதன் பின்னர் அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன மற்றும் என் ஜி கே ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கின. ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வி அடைய அவர் நடிகராகவும் அறிமுகமானார்.
அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்போது தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கும் படங்களில் நடிகர்களின் நடிப்பு மிகவும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருக்கும். அதற்காக அவர் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு நடிகர்களிடம் உச்சபட்ச நடிப்பை வாங்குவார். அதனால் சில நடிகர்கள் அவரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் அவரின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கே நடந்துள்ளதாம்.
புதுப்பேட்டை படத்தில் முதலில் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் கஸ்தூரி ராஜாவைதான் நடிக்க வைத்தாராம். அவரும் சில நாட்கள் நடித்தாராம். ஆனால் அவர் நடிப்பு பிடிக்காத காரணத்தால் செல்வராகவன் அவரை தூக்கிவிட்டு, அவருக்குப் பதில் மூணார் ரவியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தாராம். தனக்கு சினிமாவில் அறிமுகம் கொடுத்த அவரது தந்தையிடமே செல்வராகவன் அவ்வளவு கறாராக இருந்துள்ளார்.
