தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
சிவாஜியின் தொடக்க காலம் மிகவும் ஏறுமுகமாக இருந்தது. எம் ஜி ஆர் அரசியலுக்கு சென்றபின்னர் சிவாஜி நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. சரியான போட்டி இல்லாததும் ஒரு காரணமாக அமைந்தது. அதனால் சிவாஜி கணேசன் 80 களின் தொடக்கத்திலேயே குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.
சிவாஜி கணேசன் தன்னுடைய கேரியரில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரே ஒரு படம் மட்டும் ஏ சான்றிதழ் பெற்ற படமாகும். அது 1979 ஆம் ஆண்டு அவர் நடித்த ‘கவரிமான்’ என்ற திரைப்படமாகும். இந்த படத்தில் சிவாஜி, தன் மனைவி வேறொருவருடன் பிறழ் உறவில் இருப்பதை பார்த்ததும் அவரை கொலை செய்து விடுவார்.
அவர் தன் மனைவியைக் கொலை செய்வதை அவரின் மகளான ஸ்ரீதேவி, பார்த்துவிட, தந்தையை வெறுக்க ஆரம்பிக்கிறார். அவர்களுக்கிடையிலான போராட்டமே கவரிமான் படத்தின் கதையாக அமைந்தது. இந்த படம் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது. இதனால் 18 வயதுக்குட்பட்டோர் இந்த படத்தை பார்க்க கூடாது என்று இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டது. அதே போல எம் ஜி ஆர் நடித்த மர்மயோகி திரைப்படம்தான் தமிழில் முதல்முதலில் வெளியான ஏ சான்றிதழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.