“திமுக, அதிமுக-வை விட மோசம்… தமிழகத்திற்கே பேரவலம்”…. விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த பகிரங்க எச்சரிக்கை… அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் வன்மையாகக் கண்டித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு முன்னணி தொலைக்காட்சி நெறியாளரையே நேரடியாகக் குறிவைத்து ஒடுக்குவது தமிழ்நாடு இதற்குமுன் பார்த்திராத ஒரு பெரும் பேரவலம் என்று தமிழக முதல்வர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி வரும் ஊடகவியலாளர் தம்பி விஜயனை விசாரணை என்ற பெயரில் காவல்துறை அச்சுறுத்துவது அதிர்ச்சியளிக்கிறது என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபரை நேர்காணல் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக, நெறியாளரை காவல் நிலையத்திற்கு அழைத்து மோசமாக நடத்துவதும், அவரது அலைபேசியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு கண்ணியக்குறைவாகச் செயல்படுவதும் சனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், இது கருத்துரிமை மீது தொடுக்கப்பட்ட கோரத்தாக்குதல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

   

திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளுக்குத் தனது ஆட்சிதான் மாற்று என்று கூறிக்கொள்ளும் தவெக தலைவர் விஜய், தற்போது அதிகாரத்தில் இருக்கும்போது விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாசிசப் போக்கைக் கையில் எடுத்துள்ளதாகச் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். காமராசர், அம்பேத்கர், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, நிர்வாகச் சீர்கேடுகள் மீதான விமர்சனங்களை ஏற்கும் சகிப்புத்தன்மையின்றி இவ்வாறு காட்டாட்சியை ஏவிவிடுவது சனநாயக விரோதச் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இறுதியாக, தவெக அரசு தனது 60 நாள் ஆட்சிக் காலத்திலேயே கடும் நிர்வாகக் குறைபாடுகளைச் சந்தித்து வருவதாகவும், அதனைப் பேசும் ஊடகவியலாளர்களை மிரட்டும் நோக்கில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி (கேபிள் டிவி) வழியாக ஊடகங்களை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதாகவும் சீமான் எச்சரித்துள்ளார். உடனடியாக இந்த அடக்குமுறைப் போக்கைக் கைவிட்டு, ஊடகவியலாளர் தம்பி விஜயனுக்கு காவல்துறை மூலம் தரப்படும் நெருக்கடிகளை நிறுத்தி அவரை விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் சனநாயக ஆற்றல்கள் இணைந்து மிகப்பெரிய விளைவுகளை அரசுக்கு எதிராக ஏற்படுத்த நேரிடும் என்றும் தனது அறிக்கையில் அவர் எச்சரித்துள்ளார்.