திரைப்பட இயக்குநர், நடிகர் என்ற அடையாளங்களை கொண்டவர் சீமான். பிரபு, மதுபாலா நடித்த பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீமான். சினிமாவில் ஆரம்ப காலத்தில், அமைதிப்படை படம் இயக்கிய போது மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பல படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
மணிவண்ணனை அப்பா என்றுதான் பேசும்போது கூட குறிப்பிடுவார். மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் சீமான் நடித்திருக்கிறார். அரசியலுக்கு வந்த பிறகு சினிமா இயக்குவதில், நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக, அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபமாக மேடைகளில், பொது இடங்களில் காணப்படும் சீமான் தாடி வளர்த்த நிலையில் காணப்படுகிறார். இதைப் பார்த்த பலரும், எதற்காக சீமான் தாடி வளர்க்கிறார் என குழம்பி போயுள்ளனர். ஆனால் அதற்கான பதில் இப்போது கிடைத்திருக்கிறது.
தான் நடிக்கும் ஒரு படத்தின் கேரக்டருக்காக சீமான் தாடி வளர்க்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி என்ற படத்தில், சீமான் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடிக்கிறார்.
அந்த கதையின் படி அப்பா சீமான், இயற்கை விவசாயத்தை விரும்புகிறவர். மகன் பிரதீப் ரங்கநாதன், செயற்கை விவசாயத்தை விரும்புகிறவர். இப்படி அப்பா, மகன் இருவருக்கும் இடையிலான இந்த போராட்டம்தான் படத்தின் மையக்கருவாக இருக்கும் என்று தெரிகிறது. அதற்காக பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக, அதுவும் இயற்கை விவசாயத்தை விரும்பும் ஒரு விவசாயியாக நடிக்கும் பட்சத்தில் அதற்கான உருவத்தோற்றம் தேவை என்பதற்காக, சீமான் தாடி வளர்ப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காத சீமான், இந்த படத்தில் விவசாயி கேரக்டரில் நடிக்க முக்கிய காரணம், அவரது கட்சி சின்னமே விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவர் கேரக்டருக்கு தகுந்தபடி படத்தில் கேரக்டரும் இருப்பதால், எல்ஐசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார் சீமான்.