நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவரை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், “தமிழ் என்று உச்சரிக்கத் தயங்குபவர்களிடமும், தமிழன் என்ற அடையாளத்தைக் கைவிட்டவர்களிடமும் நாட்டை ஒப்படைத்துவிட்டு தமிழ் சமூகம் நடுத்தெருவில் நிற்கிறது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், நடிகரையும் தலைவரையும் பிரித்தறியத் தெரியாத கூட்டமாக மக்கள் மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தனது தலைவரைக் குறித்துப் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியின் முக்கியத்துவம் மற்றும் அடையாள மீட்பு குறித்துப் பேசிய சீமான், பிற மொழிகளை வாழ்வாதாரத்திற்காகக் கற்றுக் கொண்டாலும், தாய்மொழியான தமிழை இனத்தின் வாழ்விற்காகப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆங்கிலத்தை அறிவாகக் கருதும் மனநிலையைச் சுட்டிக்காட்டி, அது அடுத்தவனின் மொழி என்பதை உணர்ந்து ‘பிளடி நான்சென்ஸ்’ என ஒதுக்கும் நாளில் தான் இந்த நாடு சீரடையும் என்றார். மொழி என்பது வெறும் பேச்சல்ல; அது நம் முகவரி, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் அரசியல் என்று குறிப்பிட்ட அவர், இந்த உணர்வு மேலோங்கும்போதுதான் தமிழினத்திற்கு மானமும் வீரமும் பிறக்கும் என முழங்கினார்.
நாம் தமிழர் கட்சி மீது வைக்கப்படும் ‘திரள்நிதி’ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “இவ்வளவு காலம் எங்களைத் திருடர்கள் என்று சொன்னவர்கள் திருட்டு நிதிக்காரர்கள்; இப்போது புதிதாக விமர்சிக்கும் அயோக்கியர்கள் பிளாக் டிக்கெட் விற்றவர்கள்” என்று காட்டமாகத் சாடினார். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றவர்கள் தங்களை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரசியலில் ஆட்டம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும், ஒருநாள் பந்து தங்கள் கைக்கு வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலை மிகவும் வெறியோடு எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்த சீமான், அரசியல் களத்திற்குத் தான் கார் வாங்குவதையோ அல்லது தங்களின் இருப்பையோ விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். “நாங்கள் இன்னும் முழுமையாகக் களத்திற்கே வரவில்லை; நாங்கள் களமிறங்கினால் உங்கள் நிலைமை என்னவாகும்?” எனக் கேள்வி எழுப்பியதுடன், வரும் தேர்தலில் தங்களின் அரசியல் ஆட்டம் நிச்சயம் மாறும் என்பதைத் தீவிர தொனியில் தெளிவுபடுத்தினார்.
