மயிலாடுதுறை அருகே பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய அக்காவைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் ஓடிவந்த மூன்று வயது பெண் குழந்தை, எதிர்பாராதவிதமாக வேனின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரின் மூத்த மகள் மகிழினி, தேரழுந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பிய மகளை இறக்கி அழைத்துச் செல்ல தாய் சென்ற நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது இளைய மகள் இதழினி, அக்காவைக் கண்ட உற்சாகத்தில் தாயின் கவனத்தைத் தாண்டி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.
சிறுமி இதழினி வேனின் பின்புறம் நிற்பதை கவனிக்காத வேன் ஓட்டுநர் தமிழ்வாணன், வாகனத்தை திடீரென பின்புறமாக (ரிவர்ஸ்) இயக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுமியின் தலைப்பகுதியில் வேனின் பின்சக்கரம் ஏறியதில், அவர் தீவிர காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாகச் சிறுமியை மீட்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் உடல் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இத்துயரச் செய்தி பரவியதும் சித்தாம்பூர் கிராம மக்கள், உறவினர்கள் எனத் திரளானோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். மகளைப் பறிகொடுத்துக் கதறி அழுத பெற்றோரின் காட்சிக் கண்டு அங்கிருந்த அனைவரும் கண்ணீர் சிந்தினர். இச்சம்பவம் குறித்து பாலையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி வேனைப் பறிமுதல் செய்ததோடு, கவனக்குறைவாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தமிழ்வாணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்றும், குழந்தைகள் இறங்கும் இடங்களில் வாகனங்களை மிகவும் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குழந்தைகள் இருக்கும் இடங்களில் பெரியவர்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் எச்சரிக்கையாக இச்சம்பவம் அமைந்துள்ளது.
