திமுகவில் புயலைக் கிளப்பிய ‘நால்வர் அணி’…. 76 பேர் கொண்ட மாஸ் பட்டியலில் வெளியான சர்ப்ரைஸ் விவரங்கள்…. அறிவாலயத்திலிருந்து வந்த அதிரடி உத்தரவு…!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி அமைப்புகளை வலுப்படுத்தி மறுசீரமைக்கும் பணிகள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளன. இதற்காகத் தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களுக்கும் தலா இருவர் வீதம், மொத்தம் 76 தலைமைக்கழகப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் சபரீசன் ஆகியோர் அடங்கிய ‘நால்வர் அணி’யே இந்த நியமனப் பட்டியலை முறைப்படி தேர்வு செய்து முடிவாக்கியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சென்னை அறிவாலயத்தில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அமைப்பு ரீதியாக இருந்த 77 மாவட்டங்கள் 110 மாவட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

நியமிக்கப்பட்டுள்ள இந்த 76 பிரதிநிதிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் கட்சிப் பணிகளை நேரில் சென்று மேற்கொள்ளவுள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும், வரும் 15 நாட்களுக்குள் தொகுதிவாரியாக நகரம், ஒன்றியம், பேரூர், வட்ட மற்றும் கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான உரிய பரிந்துரைகளைத் தலைமைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த 76 பிரதிநிதிகள் பங்கேற்கும் ‘வீடியோ கான்ஃபரன்ஸ்’ ஆலோசனைக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   

மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் அணிச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்னியூர் சிவா மற்றும் இளைஞரணி மாநில துணைச்செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திற்கு ராஜ்யசபா எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஆகியோரும், செங்கல்பட்டு மாவட்டத்திற்குத் திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை மற்றும் கோவி.லெனின் ஆகியோரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மருத்துவர் கணேஷ் மற்றும் ராணி ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   

முற்றிலும் கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மறுசீரமைப்புப் பட்டியலில் அனுபவமிக்கவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6 தற்போதைய எம்.பி.க்கள், 5 முன்னாள் எம்.பி.க்கள், 9 தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 11 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, மகளிர் அணியைச் சேர்ந்த 6 பேருக்கும் இளைஞரணியைச் சேர்ந்த 5 பேருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுப் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் அனைத்து சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து ‘நால்வர் அணி’யால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த நிர்வாகிகள், கட்சிப் பணிகளை விரைவாக முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.