தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.
இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.
90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை. அதன்பின்னர் அவரின் உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து படங்களை இயக்கி அவருக்கு பெருமை சேர்த்தனர்.

பாலு மகேந்திரா கடைசியாக இயக்கிய படம் ‘தலைமுறைகள்’. இந்த படத்தில் அவர் நடிகராகவும் பங்களித்திருந்தார். இந்த படத்தை சசிகுமார் தன்னுடைய நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார். இந்த படம் உருவானது குறித்து சசிகுமார் ஒரு நேர்காணலில் “ஒரு நாள் பாலு மகேந்திரா சார் எனக்கு போன் செய்து ‘தலைமுறைகள்’ படம் பற்றி சொன்னார். அதை நான் தயாரிக்க வேண்டும் என்றார். எல்லாக் கதவுகளையும் தட்டியபின்னரே என்னிடம் வருவதாக சொன்னார்.
அப்போது நாங்கள் எடுத்த ஒரு படம் வேறு தோல்வி அடைந்திருந்தது. அதனால் என் மேனேஜர் எல்லாம் வேண்டாம் என்றார்கள். ஆனால் என்னைத் தேடிவந்த அவரை நான் எப்படி வெறும் கையோடு அனுப்புவது. அதனால் நான் அந்த படத்தைத் தயாரிக்கிறேன் என்றேன். எனக்கு சினிமாவில் சாதனை சுப்ரமணியபுரம் எல்லாம் இல்லை. பாலு மகேந்திரா சாரின் படத்தைத் தயாரித்ததுதான்” எனக் கூறியுள்ளார்.
