“அரசியல் வேண்டாம்னு விஜய்கிட்ட அரைமணி நேரம் பேசுனேன்… ஆனா”…. தயாரிப்பாளர் சங்கிலி முருகன் வெளிப்படுத்திய சீக்ரெட்….!

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், மூத்த நடிகருமான சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தளபதி விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் ‘சுறா’ ஆகிய படங்களின் தயாரிப்பு நினைவுகளையும், விஜய்யுடன் தனக்கிருந்த ஆழமான பிணைப்பையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஃபாசில் இயக்கத்தில் உருவான ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் ஒரே கட்டப் படப்பிடிப்பாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும், அப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு முன்பணமாக ₹1.5 லட்சமும், மொத்த சம்பளமாக ₹18.5 லட்சமும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மலையாளத்தில் அறிமுகமான நடிகை ஷாலினியைத் தமிழிற்கு அழைத்து வந்த பின்னணி, படத்தொகுப்பாளரின் சந்தேகங்களைத் தாண்டி அவரை கதாநாயகியாக தேர்வு செய்தது மற்றும் திரைப்பட தொழிலாளர்களின் (FEPSI) வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் சவால்களைக் கடந்து பொள்ளாச்சியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நிறைவு செய்த சுவாரஸ்யமான தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளையில், விஜய்யின் 50-வது திரைப்படமான ‘சுறா’ சந்தித்த படுதோல்விக்கான காரணத்தையும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இயக்குநர் முதலில் கூறிய கதையும், பின்னர் படமாக்கிய விதமும் முற்றிலும் வேறாக இருந்ததே அப்படத்தின் தோல்விக்கு முதன்மை காரணம் என்றும்; ஹைதராபாத், மும்பை, ராமேஸ்வரம் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி ஒருவழியாகப் படத்தை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க முயற்சி செய்தபோதிலும், அது கைகூடாமல் ‘எட்டாக்கனியாகிவிட்டது’ என்றும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

   

நடிகராக மட்டுமின்றி விஜய்யின் நலனில் அக்கறை கொண்ட மூத்த ஆலோசகராகவும் இருந்த சங்கிலி முருகன், ‘சுறா’ படப்பிடிப்பின் போது விஜய்யிடம் “அரசியல் வேண்டாம் தம்பி, தற்போது நீங்கள் மிகவும் கௌரவமான இடத்தில் இருக்கிறீர்கள்; அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் கடுமையாகும்” என அரை மணி நேரம் அறிவுறுத்தியதாகவும் நினைவுகூர்ந்துள்ளார். 1979-ஆம் ஆண்டு முதல் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற இவர், ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘காரைமேடு கருவாயன்’, ‘பெரிய மருது’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.