தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் (நாதக) வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் மற்ற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயை நேரடியாக விமர்சித்துப் பேசினார். இது அங்கிருந்த கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயால் முன்வைக்கப்படும் பொருளாதாரத் திட்டங்களைச் சாடிய துரைமுருகன், பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பினார். இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டிற்குச் சுமார் ரூ. 90,000 கோடி தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வளவு பெரிய தொகையை எந்த பொருளாதார ஆதாரத்திலிருந்து திரட்டுவீர்கள் என்ற விளக்கத்தைக் கோரினார். வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மட்டும் மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சீரமைக்க முடியாது என்பதை அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார்.
இறுதியாக ஒரு சவாலையும் அவர் முன்வைத்தார். “இந்த ரூ. 90 ஆயிரம் கோடிக்கான நிதி ஆதாரத்தை எப்படி உருவாக்குவீர்கள் என்று மட்டும் விஜய் விளக்கிச் சொன்னால், அவரை விமர்சிப்பதை நான் அப்படியே விட்டுவிடுகிறேன்; அதுமட்டுமின்றி, உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதற்கும் நான் தயார்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். இந்த சவால் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
