இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அதன் பின்னர் வாலி படத்தை இயக்கி அஜித்துக்கு ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார். அந்த படம் அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் முடிந்ததுமே விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி மரியா அந்த படம் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “குஷி படத்தின் கதை என்ன என்பதை நான் முதலிலேயே சொல்லிவிடப் போகிறேன்” என சூர்யா சொன்னதும் எல்லோருமே பயந்தோம். கதையை சொல்லிவிட்டால் எப்படி ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகும் எனக் கேட்டோம்.
அதற்கு அவர் “இது ஒரு எளிமையான கதைதான். அதை முதலிலேயே சொல்லிவிட்டால் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்க மாட்டார்கள். அதுவே நம் படத்துக்கு பாசிட்டிவ்வாக அமையும் எனக் கூறினார்.”என தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே குஷி திரைப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பிற மொழிகளிலும் ரீமேக் ஆகி ஹிட்டானது.