தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.
இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.
90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை.
இதற்கிடையில் பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளராக இருந்தபோதும், அவர் ஒரு கட்டத்தில் பிற இயக்குனர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யமாட்டேன் என சொல்லிவிட்டார். பல முன்னணி இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்யவந்த போதும் தன்னுடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.
அதற்குக் காரணம் அவர் ஒளிப்பதிவு செய்யும் படங்களை அவரேதான் இயக்குகிறார் என்று அப்போது ஒரு வதந்தி பரவியது. இயக்குனர் முதல் முதலாக இயக்கிய பல்லவி அனு பல்லவி திரைப்படத்துக்கு பாலு மகேந்திராதான் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆனால் மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இல்லை என்பதால் அவருக்கு படமெடுக்கத் தெரியவில்லை என்றும், அதனால் பாலு மகேந்திராதான் அந்த படத்தையே இயக்கினார் என்றும் திரையுலகில் சொல்லப்பட்டது.
இதேபோன்று மகேந்திரன் முள்ளும் மலரும் எடுக்கப்பட்ட போதும் சொல்லப்பட்டது. அதனால் இனிமேல் பிற இயக்குனர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதில்லை என்ற முடிவை எடுத்தாராம் பாலு மகேந்திரா.