மிகவும் ஆபத்தான குகையில்.. பல வருடமாக 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்ய பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

கர்நாடகாவில் மலைப்பகுதியில் ஆபத்தான இடத்தில் உள்ள குகையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தங்கி இருந்த ரஷ்யாவை சேர்ந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். கர்நாடகாவின் ராம தீர்த்தம் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் இடத்தில் குகை ஒன்று அமைந்துள்ளது. விஷப் பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அந்த பகுதியில் அதிகமாகவே இருக்கும். இந்தப் பகுதியில் சுற்றுலா வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு பெண்ணின் நடமாட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்த நிலையில் அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்த போது அவருடைய பெயர் நினா குடினா (40) என்பதும் ரஷ்யாவை சேர்ந்த அவர் இரண்டு பெண் குழந்தைகளுடன் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

ஆன்மீக ரீதியில் இந்தியா வந்தார் அந்தப் பெண் தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு அமைதியான இடத்தை தேடிய போது அங்கு வந்து தங்கியதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் நிலவும் ஆபத்து குறித்து விளக்கிய போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஆன்மீக மடம் ஒன்றில் தங்க வைத்தனர். மேலும் குகையில் அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஆய்வு செய்தபோது கடந்த 2017 ஆம் ஆண்டு வர்த்தக விசாவில் அவர் இந்தியா வந்ததும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி அது காலாவதி ஆகிவிட்டதும் தெரியவந்தது. அதுவரை கோவாவில் தங்கி இருந்த அவர் மீண்டும் கிளம்பிச் சென்ற நேபாளம் வழியாக மீண்டும் இந்தியாவுக்குள் திரும்பி வந்த சட்ட விரோதமாக தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை குழந்தைகளுடன் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.