தொழில் செய்யாமல் ரூ.9 கோடி ஜி.எஸ்.டி…! வங்கி கணக்கை முடக்கியதால் ஷாக்கான பெண்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

By Devi Ramu on கார்த்திகை 28, 2025

Spread the love

திருச்சி மன்னார்புரம் பகுதியை சேர்ந்த கலைவாணி (35) என்பவர், தனது தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முயன்ற போது, அவரது கணக்கு முடக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது, அவர் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) ரூ.9 கோடியே 48 லட்சம் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை உள்ளதால், கணக்கை முடக்க நோட்டீஸ் வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொழில் எதுவும் செய்யாத தான் இவ்வளவு பெரிய தொகையை ஏன் செலுத்த வேண்டும் என்று கலைவாணி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில், கலைவாணியின் ஆதார் எண், பான் கார்டு, புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் போலியாக ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

   

அந்த போலியான நிறுவனம் வர்த்தகம் செய்துவிட்டு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை செலுத்தாத குற்றத்திற்காகவே, கலைவாணியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு இருப்பது அம்பலமானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.