முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட போலி செய்தி தடுப்பு பிரிவின் தலைவருக்கு, ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு வழங்கப்படுவதை விட அதிக சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் அரசாணையுடன் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ மாத சம்பளம் சுமார் 2,05,000 ரூபாயாக இருக்கும் நிலையில், இந்த செய்தி சரிபார்ப்பு பிரிவின் தலைவராக இருந்த ஐயன் கார்த்திகேயன் என்பவருக்கு மாத சம்பளமாக 3,00,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இந்த அரசாணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்த செய்தி சரிபார்ப்பு திட்டத்திற்காக மட்டும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து பெருமளவு நிதி வாரி இறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் துறைக்காக ‘தொடர் செலவினம்’ (Recurring Expenditure) என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக மாதத்திற்கு 29,62,000 ரூபாயும், வருடத்திற்கு 3,55,44,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வப் பட்டியலின் மூலம் தெளிவாகிறது என்று நெட்டிசன்கள் ட்விட்டர் (X) போன்ற தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு போதிய பணம் இல்லை என்று கூறிக்கொண்டு, தங்களுடைய அரசியல் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்களுக்குச் சாதகமாகச் செயல்படுபவர்களைக் குளிரூட்டவும் திமுக அரசு மக்கள் பணத்தை இவ்வாறு வீணடித்திருப்பது அப்பட்டமான பகற்கொள்ளை மற்றும் உச்சகட்ட நிர்வாகச் சீர்கேடு என்று சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர். எனவே, தேவையற்ற இந்த ஆடம்பரச் செலவினங்கள் குறித்து தற்போதைய அரசு உரிய விசாரணை நடத்தி, மக்கள் பணத்தை வீணடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
