பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் சௌசா அருகே உள்ள அர்சண்டி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மருமகளே மாமியாரை அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 68 வயதான பிரமீளா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை காலை வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டிருந்த பிரமீளா தேவி, தனது மருமகள் ராஜோ தேவி குழந்தையைத் திட்டுவதைக் கண்டு, குழந்தையின் முன்னிலையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.
இந்த எளிய அறிவுரை இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறி, இறுதியில் கொடூரமான வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த மருமகள் ராஜோ தேவி, மாமியாரின் முடியைப் பிடித்து தரையில் தள்ளி, அவரது தலையை தார் சாலையில் மோதியுள்ளார். காயமடைந்த பிரமீளா தேவி தப்பியோட முயன்றபோதும், விடாமல் துரத்திய மருமகள் ஒரு மரப்பலகையை எடுத்து அவரது தலையில் பலமுறை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த பிரமீளா தேவியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சௌசா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சௌசா காவல் நிலைய அதிகாரி ரவி குமார் பஸ்வான் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து பிரமீளா தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் ஆய்வகக் குழுவும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த மருமகள் ராஜோ தேவியை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அர்சண்டி கிராமமே தற்போது சோகத்திலும் பீதியிலும் மூழ்கியுள்ளது.
