சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிய நடைபாதைகள் அமைப்பதற்காக ரூ.284 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திட்டத்திற்கான டெண்டர்களை பெருநகர சென்னை மாநகராட்சி திடீரென ரத்து செய்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான டெண்டர்கள் பிப்ரவரி மாதம் கோரப்பட்டிருந்த நிலையில், அவற்றின் ஆய்வின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் நடைபாதைகள் அமைப்பதற்காக 35 பேக்கேஜ்களாக டெண்டர்கள் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால், திட்டத்தின் உண்மையான மதிப்பீட்டை விட நான்கு மடங்கு வரை கூடுதல் செலவுகள் சேர்க்கப்பட்டிருந்ததுடன், சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே சாதகமாக டெண்டர் நிபந்தனைகள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தேவையில்லாத உதிரிபாகங்கள் மற்றும் பணிகள் விரிவான திட்ட அறிக்கையில் இணைக்கப்பட்டிருந்ததும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையேயான இந்த முறைகேடான கூட்டுச் செயல்பாடு அரசு கஜானாவுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என தற்போதைய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் முழுமையாக கைவிடப்படாது என்றும், விரிவான திட்ட அறிக்கை முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டு, வெளிப்படையான நடைமுறைகளுடன் சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
