“வேலை போச்சு.. இப்ப பிச்சையும் போச்சா?”…. சீனாவில் மனிதர்களுக்குப் போட்டிக்கு வந்த ‘ரோபோ பிச்சைக்காரன்’.. நெட்டிசன்கள் அதிர்ச்சி…!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

ரோபோக்கள் மனிதர்களுக்குப் பதிலாகப் பல கடினமான மற்றும் அதிநவீன வேலைகளைச் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சீனாவில் ரோபோ ஒன்று பொதுமக்களிடம் கைகூப்பி பிச்சை எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு பரபரப்பான நடைபாதையில், மனித உருவிலான (Humanoid) ரோபோ ஒன்று மண்டியிட்டு அமர்ந்து பாதசாரிகளிடம் காசு கேட்கும் இந்த விசித்திரக் காட்சி, பார்ப்பவர்களைப் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ரோபோ சாதாரணமாகப் பிச்சை எடுக்காமல், “தனது மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் பணம் தேவை” என்ற வினோதமான காரணத்தைக் கூறி பிச்சை எடுக்கிறது. ஒரு முழங்காலை மடித்து தரையில் அமர்ந்தபடி, கடந்து செல்லும் மக்களைப் பார்த்துக் கைகூப்பிக் குனிந்து அது வணங்குகிறது. அதன் உடம்பில் உள்ள எல்இடி போர்ட்டில் “ரீசார்ஜ் செய்யப் பணம் இல்லை, தயவுசெய்து மின்சாரக் கட்டணம் செலுத்த உதவுங்கள்” என்ற வாசகம் ஒளிர்கிறது. மேலும், அதற்கு முன்னால் ரொக்கப் பணத்தைப் போடுவதற்காக ஒரு சிறிய தட்டும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக ஒரு க்யூஆர் (QR) கோடும் வைக்கப்பட்டுள்ளன.

   

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், தற்போதைய நவீன உலகில் பிச்சை எடுக்கும் தொழிலைக் கூட ரோபோக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன என்றும், இதனால் மனிதர்களை ஏஐ (AI) ரோபோக்கள் வெல்லும் காலம் நெருங்கிவிட்டது என்றும் கவலைப்படுகிறார்கள். வேறு சிலரோ, இது ஒரு புதிய வகையான விளம்பர யுக்தி என்றும், ரோபோவை வேறு எந்த விதத்தில் காட்சிப்படுத்தி இருந்தாலும் இவ்வளவு தூரம் கவனத்தை ஈர்த்திருக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், கடந்து செல்லும் பாதசாரிகள் சிலர் அந்த ரோபோவின் தட்டில் நாணயங்களைப் போடுவதையும், க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதையும் பார்க்க முடிகிறது.

   

சீனாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. பெய்ஜிங், செங்டூ மற்றும் புஜோ போன்ற சீனாவின் முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற “ரோபோ பிச்சைக்காரர்கள்” நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவை பெரும்பாலும் “எனது மொபைலை சார்ஜ் செய்ய என்னிடம் பணம் இல்லை” போன்ற வாசகங்களைக் கொண்டு மக்களிடம் நிதியுதவி கேட்கின்றன. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றும் அதே வேளையில், மனித உணர்வுகளைத் தூண்டி கவனத்தை ஈர்க்கும் ஒரு புதிய வணிக உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.