மத்திய அமைச்சரவையில் மாற்றம்?… அமித்ஷா கிட்ட போன அந்த ஒரு ஃபைல்…. தூக்கப்படும் முக்கிய புள்ளி…. கமலாலய சீனியர்கள் உடைக்கும் ரகசியம்….!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிக சீரியஸாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த மறுசீரமைப்பில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. கட்சியின் தேசியத் தலைமை எல்.முருகன் மீது அதிக நம்பிக்கை வைத்து, தொடர்ந்து முக்கியத்துவமும் ஆதரவும் வழங்கி வந்ததோடு, தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட இருமுறை வாய்ப்புகளும் அளித்தது. எனினும், இவ்வளவு பெரிய அரசியல் பின்னணி இருந்தும் அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது அவரது பலவீனமாகச் சுட்டிக்காட்டப்பட்டு, மக்களிடம் அவர் இன்னும் வலுவான செல்வாக்கை உருவாக்கவில்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, எல்.முருகனை பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று பாஜகவின் முக்கியத் தரப்பினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரடியாகவே வலியுறுத்தியுள்ளனர். அதேநேரம், மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவான கருத்துக்களையும் முன்வைக்கின்றனர். எல்.முருகன் தனது துறையைத் திறமையாகக் கையாள்வதாகவும், அவரை நீக்கினால் தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லாமல் போய்விடும் என்றும் தேசியத் தலைவர்கள் சிலர் வாதிடுகின்றனர். எந்தவொரு துறையைக் கொடுத்தாலும் சர்ச்சையின்றி கையாளுவார் என்பதால், அவரை நீக்காமல் வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்று கமலாலய சீனியர்கள் இப்போது விவாதித்து வருகின்றனர்.

   

டெல்லியில் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தமிழக பாஜக அரசியலிலும் இதன் தாக்கம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. எல்.முருகனை ஒட்டுமொத்தமாக அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த வேறு ஒரு புதிய முகத்திற்கு வாய்ப்பளிக்கலாமா என்கிற தீவிர யோசனைகளும் டெல்லி மேலிடத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒரே முகமான எல்.முருகனின் அமைச்சர் பதவி நீடிக்குமா அல்லது பறிக்கப்படுமா என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

   

இருப்பினும், தமிழக பாஜகவின் தற்போதைய சூழலில் எல்.முருகனைத் தவிர வேறு யாருக்கு அமைச்சர் வாய்ப்பைத் தந்தாலும், அது மாநிலக் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி அரசியலையும், உள்முகப் பூசல்களையும் மேலும் அதிகப்படுத்தும் என்ற கலக்கமும் மேலிடத்திற்கு உள்ளது. எந்தவித தேவையில்லாத சர்ச்சைகளையும் உருவாக்காதவர் என்பதால், எல்.முருகனை அமைச்சரவையில் இருந்து முழுமையாக நீக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஒரு தரப்பு கருதுகிறது. இந்த அரசியல் நகர்வுகளுக்கான இறுதி விடை மற்றும் அமித்ஷாவின் முடிவு என்ன என்பது அடுத்து வரக்கூடிய நாட்களில் தெரிந்துவிடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.