பெங்களூரு கேங்கேரியில் உள்ள கைலாஷ் பி.டி.ஏ குடியிருப்பில் நடைபெற்ற லட்சுமி பூஜையின் போது, உறவினர் வீட்டின் பூட்டை போலி சாவியால் திறந்து தங்கம் மற்றும் பணத்தை திருடிய அஷ்வத் கே.எச். என்பவரை கேங்கேரி போலீசார் கைது செய்துள்ளனர். காரை பார்க் செய்வதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த இவர், குடும்பத்தினர் பூஜையில் பிஸியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி இத்திருட்டை அரங்கேற்றியுள்ளார்.
சுமார் ₹8 லட்சம் மதிப்பிலான இரண்டு தங்க நெக்லஸ்கள் மற்றும் ஒரு கைக்காப்பை திருடிய சந்தேக நபர், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவற்றுக்கு பதிலாக போலி ஆபரணங்களை வைத்துச் சென்றுள்ளார். மேலும், பூஜை தட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ 8,000 ரொக்கப் பணத்தையும் அவர் திருடிச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பூஜை முடிந்த பிறகு போலி ஆபரணங்கள் மாற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து உடனடியாக புகாரளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியை மீட்ட போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
