தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்ஷாபாத் சித்தார்த் காலனியை சேர்ந்த நர்மதா என்ற இளம் பெண், தனது காதலனின் திடீர் மரணத்தை தாங்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. நர்மதா, நிஜாமாபாத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாகச் சமீபத்தில் நடந்த ஒரு பயங்கரச் சாலை விபத்தில் சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார். காதலனின் இந்தத் திடீர் மறைவு நர்மதாவைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
தனது கனவில் சித்தார்த் வந்து தன்னைத் தன்னோடு வருமாறு அழைப்பதாகத் தனது சகோதரியிடம் கூறி நர்மதா புலம்பி வந்துள்ளார். மேலும், “சித்தார்த் இல்லாத இந்த உலகத்தில் என்னால் வாழ முடியாது” எனத் தன் குடும்பத்தினரிடம் கூறி அழுது துடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து, நர்மதா தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நர்மதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆர்ஜிஐ ஏர்போர்ட் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
