தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சலுகைகளை முறைகேடாகப் பெற போலி சாதிச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களில் தனி இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் இலவசத் தங்கும் வசதி, அரசுப் பணிகளில் வயது வரம்புச் சலுகை மற்றும் இலவசப் பயிற்சி வகுப்புகள் எனப் பல்வேறு நன்மைகள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இச்சலுகைகளைக் குறிவைத்து, 2018-ம் ஆண்டு முதல் சிலர் முறைகேடான வழிகளில் பழங்குடியினர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக அரசுக்குத் தொடர் புகார்கள் வந்தன. இதன் பின்னணியில், தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் உள்ள ‘காணிக்காரன்’ மற்றும் ‘காணிக்கர்’ சமூகத்தினர் கன்னியாகுமரி மாவட்டம், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகியப் பகுதிகளில் மட்டுமே பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். விதிகளின்படி இந்த குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்பவர்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 01.01.2018 முதல் 26.05.2026 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, இராமநாதபுரம், திருவாரூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மொத்தம் 954 பேருக்கு இச்சமூகம் சார்ந்த பழங்குடியினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்குச் சமூகநீதித்துறைச் செயலாளர் டாக்டர் சுப்பையன் அவர்கள் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அந்தந்தப் பகுதிகளுக்குச் சம்பந்தமில்லாத பிற மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுக்கு எந்த அடிப்படையில் இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்பது குறித்து ஆட்சியர்கள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணையில் போலி அல்லது முறைகேடாகச் சான்றிதழ் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அவற்றை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது.
