தமிழகத்தில் அரசியல் களம் நாள்தோறும் புதிய விவாதங்களால் சூடேறி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியையும், முதலமைச்சர் விஜயையும் திரைப்பட இயக்குனர் அமீர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமீர், “ஒரு பக்கம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மக்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் ஒரு கூட்டம் ‘ஜனநாயகன்’ படத்தைக் காப்பாற்ற திரையரங்குகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது; இளைஞர்கள் திரையரங்குகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்” என்று தவெக அரசையும் விஜயையும் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். அமீரின் இந்த காரசாரமான விமர்சனம் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அமீரின் இந்தப் பேச்சுக்குத் தவெக தரப்பில் இருந்து பதில்டி கொடுக்கும் வகையில், விஜய்க்கு நெருக்கமானவரும் தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருமான லயோலா மணி உடனடியாகக் குரல் எழுப்பினார். “காங்கிரஸ் நீட் தேர்வைக் கொண்டுவந்தபோது கலைஞர் கருணாநிதிதான் முதலமைச்சராக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தபோது அமீர் ஏன் இதுபற்றி வாய திறக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பிய மணி, நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை அமீர் விமர்சிக்காதது ஏன் என்றும் வினவினார். மேலும், திமுக ஆட்சியில் அமீருக்குப் பல்வேறு நன்மைகள் கிடைத்ததாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஒருவருடன் அமீருக்குத் தொடர்பு இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
லயோலா மணியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தனது பாணியில் பதிலளித்த அமீர், லயோலா மணியின் வயதையும் அனுபவத்தையும் சுட்டிக்காட்டி நக்கலாகப் பேசினார். “தம்பி மணி… ‘சர்க்கார்’ திரைப்படத்திற்குப் பலத்த எதிர்ப்பு வந்தபோது விஜய்க்கு முதன்முதலில் ஆதரவாகக் களத்தில் நின்றது நான்தான். அப்போது நீங்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தீர்கள்? பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகப் போனீர்களா அல்லது கட்டடித்துவிட்டு வேறு எங்கேனும் சென்றீர்களா?” என்று வினவினார். மேலும், பாஜகவின் எச்.ராஜா ‘ஜோசப் விஜய்’ என்று விஜய்யின் மத அடையாளத்தைக் குறிப்பிட்டுப் பேசியபோது, “அவர் ஜோசப் விஜய்யாக இருந்தால் என்ன, விஜய் முகமதுவாக இருந்தால் என்ன?” என்று முதல் ஆளாகத் குரல் கொடுத்து விஜய்க்கு ஆதரவாக நின்றது நான்தான் எனக் குறிப்பிட்ட அமீர், அப்போது இந்தத் தம்பி மணி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்திருப்பார் என்றும் காட்டமாகக் கூறி மணியின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
