ரேஷன் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 2.21 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டை தகுந்த அதிகாரியின் மூலம் பொதுவிநியோக முறைக்காக மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது. ரேஷன் அட்டை இருந்தால் தான் மாதந்தோறும் கடைகளில் பருப்பு, சீனி, பிராமியில், அரிசி ஆகிய பொருட்களை பெற முடியும்.
இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை கணக்கெடுத்து, 15 லட்சம் அட்டைதாரர்களுக்கு அமல்படுத்த உள்ளது. வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பொது விநியோகத்துறை அதிகாரி ஒருவர், PHH, NPHH அட்டைதாரருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, பயனாளர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்தபிறகு பொருள்கள் நேரில் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
