குஷியோ குஷி…. இனிமேல் ரேஷன் கார்டு வாங்க தாலுகா ஆபீஸ் போக வேண்டாம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ரேஷன் கடை, கக்கனூர் கிராமத்தில் உள்ள கேழ்வரகு கொள்முதல் நிலையம் மற்றும் கேலவரப்பள்ளி அணைக்கு அருகில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் முகாம் ஆகிய இடங்களுக்கு அமைச்சர் பி. வெங்கடரமணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 57 அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல், லாரிகள் அல்லது சரக்கு ரயில்கள் மூலம் இவ்வாலைகளுக்குச் சரியாகச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், பொது விநியோகத் திட்டக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு முழு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி விநியோகிக்குமாறு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருடன் இணைந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், மாவட்டத்தில் கடத்தலில் ஈடுபட்ட 240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எல்லைகளில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளை ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஜூலை 7-ல் முதல்வர் தொடங்கி வைத்த 73,000 புதிய குடும்ப அட்டைகளில் இதுவரை 20,000 அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் புதிய அட்டைகள் நேரடியாக அஞ்சல் துறை மூலமாகவே மக்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார். ரேஷன் அட்டைகளில் 96% பயோமெட்ரிக் e-KYC பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் முக அங்கீகார தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.