தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி நகர்வுகள் குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகிய இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு நிலவி வரும் சூழலில், தனது அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கென, வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கருதும் ரங்கசாமி, விஜய்யின் தவெக-வுடன் கைகோர்த்துத் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கத் தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
