கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற டாப் நடிகர்கள் கொடி கட்டி பறக்க தொடங்கிய காலகட்டத்தில் தனக்கென தனி ரூட்டில் சென்று எளிய மக்களின் நாயகனாக திகழ்ந்தவர்தான் ராமராஜன். எம்.ஜி.ஆரை போல் அவர் தனது திரைப்படங்களில் மது குடிப்பது போலவும் புகைப் பிடிப்பது போலவும் நடிக்க மாட்டார்.
பல வருடங்களாக சினிமாவில் தலை காட்டாத ராமராஜன் “நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்” என்ற பிடிவாதத்தோடு இருந்தார். அதன்படி தற்போது “சாமானியன்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ராமராஜன் வெங்கட் பிரபு தன்னை அவரது திரைப்படத்தில் நடிக்க அழைத்ததாகவும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன், ராமராஜனை வைத்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் வெங்கட் பிரபுவின் “பார்ட்டி” திரைப்படத்தில் நடிக்க வெங்கட் பிரபு அழைத்ததாகவும் தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், ராமராஜன் வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிக்க மறுத்ததை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“வெங்கட் பிரபுவுக்கும் ராமராஜனுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை என தெரியவில்லை. ஒரு வேளை வெங்கட் பிரபு திரைப்படத்தில் மது குடிக்கும் காட்சிகள் அதிகமாக இடம்பெறும் என்பதால் ராமராஜன் நடிக்க மறுத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.
எப்போதும் எம்.ஜி.ஆரின் ஃபார்முலாதான் ராமராஜனின் ஃபார்முலா. திரையில் அவர் மது அருந்துவது போலவோ பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது போலவோ நடிக்க மாட்டார். குறிப்பாக தாய்குலத்துக்குப் பிடித்தவராக தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொள்பவர்தான் ராமராஜன். இதனால் கூட ராமராஜன் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மறுத்திருக்கலாம்” என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.
