பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாகவே மாறி உள்ளது. ராமதாஸ் இருந்த ஒரு மேடையிலேயே அவருக்கு எதிராக அன்புமணி ரியாக்ட் செய்தார். அதன் பிறகு தனியாகவும் செயல்பட தொடங்கினார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணிக்கு தலைமை பொறுப்பு இல்லை, தொண்டர்களை சரியாக வழி நடத்தும் பக்குவம் இல்லை, என் மனைவியே அவர் அடிக்க வந்தார். அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு என்றெல்லாம் பரபரப்பு புகார் கூறினார். ஒரு பக்கம் ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலரை அன்புமணி தன் பக்கம் இழுத்த நிலையில் தற்போது அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக என்ற பாமக இரண்டாக பிரிந்து விட்டது.
பாமகவிற்கு இனி மேல் நான்தான் தலைவர் என்று அன்புமணி சொல்லி வருகின்றார். ஆனால் அன்புமணியை தலைவராக நியமித்த காலக்கெடு முடிந்துவிட்டது. இனிமேல் அவர் தலைவர் இல்லை என்று ராமதாஸ் கூறி வருகின்றார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ், சினிமாவில் எனக்கு ஒரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான் என்ற ஒரு பாடல் வரி வரும். ஆனால் அன்புமணி என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை, மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டான், அவனைத் தலைவராக நியமித்த காலக்கெடு முடிந்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் இந்த ராமதாசை ஜெயிக்க முடியாது. என்னுடைய ஆதரவாளர்களை எல்லாம் நீ எடுத்துக் கொண்டாய். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. என்னுடைய உரிமையை நீ பறிக்க நினைக்கின்றாய். ஆனால் நான் 46 ஆண்டுகால மக்களை சந்தித்து இந்த கட்சிக்காக கொடுத்த உழைப்பையும் நீ பறிக்க நினைக்கின்றாய். அது ஒருபோதும் நடக்காது என்று ராமதாஸ் கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
