பாமக கட்சி நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த தேர்தலுக்கு முன்பு கடுமையான உட்கட்சி மோதல் நிலவியது. இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவால் மாம்பழ சின்னம் மற்றும் கட்சி அன்புமணி வசமானதுடன், தேர்தலில் பாமக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேர்தலில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க முடியாத நிலையில், ராமதாஸ் தனது 88-வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த திடீர் ஓய்வு முடிவால், அவரை மட்டுமே நம்பி அன்புமணிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தற்போது செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ராமதாஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ அருள் ஏற்கனவே பாமக-விலிருந்து விலகி விட்ட நிலையில், அன்புமணிக்கு எதிரானவர்களை ஒன்றுதிரட்டி வட தமிழகத்தில் பாமக-விற்குப் போட்டியாகப் புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர் முக்கிய தொழிலதிபர்களைச் சந்தித்து நிதி திரட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. மற்றொருபுறம், அருள் பக்கம் நிர்வாகிகள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், இளைஞர் பட்டாளத்தைக் கட்சியில் அதிகரிக்கவும் அன்புமணி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் பாமக-வில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
