தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று அன்புமணி அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைப்பதை உறுதி செய்திருந்தார். ஏற்கனவே பாமக அப்பா மற்றும் மகன் இடையேயான மோகதலால் யார் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி இருக்கும் சூழலில் நேற்று அன்புமணி கூட்டணியை உறுதி செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பாமகவுக்கு மருத்துவர் ஐயா மட்டுமே நிறுவன தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகின்றார். 2025 டிசம்பர் 17ஆம் தேதி முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடன் அல்லது வேறு எவரிடமும் எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
மருத்துவர் அய்யா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். எனவே அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில் அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்டவிரோதம். கட்சி விதிமுறையின்படி மருத்துவர் ஐயா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உடையவர் என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இது தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
