2026-ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டம் இன்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் இந்த ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் ரேஷன் கடைகளுக்குச் சென்று தடையின்றி பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசு பெறுவதற்கு ரேஷன் கார்டு ‘செயல்பாட்டில்’ (Active) இருப்பது அவசியமாகும். பல மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத காரணத்தால் சில அட்டைகள் முடக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் TNPDS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மொபைல் எண் மூலம் உள்நுழைந்து அட்டையின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை அட்டை முடக்கப்பட்டிருந்தால், பொங்கல் பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், உடனடியாக அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதனைச் சரிசெய்வது அவசியமாகும்.
