நெஸ்லே நிறுவனம் தனது சில குறிப்பிட்ட வகை குழந்தை பால் பவுடர் தயாரிப்புகளை உலகளவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருளில் (Arachidonic acid oil – ARA oil), ‘செரூலைடு’ (Cereulide) எனப்படும் பாக்டீரியா நச்சு இருப்பதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
MA, BEBA மற்றும் NAN ஆகிய பிராண்டுகளின் குறிப்பிட்ட பேட்ச்கள் (Batches) திரும்பப் பெறப்படுகின்றன. இந்த நச்சு கலந்த உணவை உட்கொண்டால் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது சோர்வு ஏற்படலாம். எனினும், இதுவரை இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நெஸ்லே பால் பவுடர் தயாரிப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், இந்த உலகளாவியத் திரும்பப் பெறும் நடவடிக்கை இந்தியாவிற்குப் பொருந்தாது என்றும், இங்குள்ள தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும் நெஸ்லே இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் வசிப்பவர்கள், குறிப்பிட்ட பேட்ச் எண்களை நெஸ்லே இணையதளத்தில் சரிபார்த்து, அவற்றை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
