அந்த ஒரு காரணத்தால் சினிமாவை விட்டே விலக நினைத்த ரஜினிகாந்த்… அட்வைஸ் சொல்லி சமாதானம் செய்த சிவகுமார்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

   

1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

ரஜினிகாந்த் நடிகர் சிவகுமாருடன் இணைந்து நடித்த திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி. அந்த படத்தில் ரஜினிகாந்த் நல்லவராகவும், சிவகுமார் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது சிவகுமார் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த் அவரிடம் ‘நான் சினிமாவை விட்டே விலகிவிடலாம் என நினைக்கிறேன்’ என்ற அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.

அதற்குக் காரணமாக ‘நான் இப்போது தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கிறேன். ஆனால் எனக்கு இரண்டு மொழியுமே சரளமாக பேசவரவில்லை. அதனால் நான் சினிமாவை விட்டே போய்விடலாமா என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட சிவகுமார் “ஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும். போக போக பழகிவிடும். நீங்கள் வருத்தப்படாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துங்கள்” என அறிவுரைக் கூறி அனுப்பியுள்ளார்.

அவர் அறிவுரையைக் கேட்ட ரஜினிகாந்த் அடுத்த சில ஆண்டுகளிலேயே உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்தார். ஹாலிவுட்டில் கூட ஒரு படம் நடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் வித்தியாசமான டயலாக் உச்சரிப்பே ஒரு தனி ஸ்டைலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.