தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ரஜினிகாந்த் பாலச்சந்தரால் அறிமுகமான போது வில்லன் நடிகராகவே பல படங்களில் நடிக்கவைக்கப்பட்டார். அவரை கதாநாயகன் ஆக்கியது கலைஞானம் அவர்கள்தான். பைரவி படத்தில் அவர ஹீரோவாக்கினார். அதன் பின்னர் முள்ளும் மலரும் வந்து அவரை திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார. அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது எஸ் பி முத்துராமனும், ராஜசேகரும்தான். இவர்கள் இருவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த ரஜினி ஹிட் படங்களாகக் கொடுத்தார்.
இந்த கமர்ஷியல் வெற்றிகளால் ரஜினி அதே பாதையில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் ரஜினி நடிக்கவே இல்லை. 90 களில் ரஜினியின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றுதான் ‘எஜமான்’. ரஜினியின் அண்ணாமலை படத்துக்குப் பிறகு ரிலீஸான இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
பிளாக்பஸ்டர் ஹிட்டான அண்ணாமலை படத்துக்கு பிறகு ரிலீஸான எஜமான் படம் சில ஏரியாக்களில் ‘அண்ணாமலை’ வசூலை தாண்டியதாம். அதனால் அதைப் போட்டு படத்துக்கு விளம்பரம் செய்யலாம் என ஏவிஎம் நிறுவனம் நினைத்துள்ளது. ஆனால் இதற்கு அண்ணாமலை படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனமும், கே பாலச்சந்தரும் ஒத்துக் கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் ஏவிஎம் சரவணன் அவர்கள் கவிதாலயா அலுவகத்துக்கு போன் செய்து கேட்டுள்ளனர். அவர்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார்களாம். அதன்பிறகுதான் ‘அண்ணாமலையின் வசூலை முந்திய எஜமான்’என விளம்பரப் படுத்தினார்களாம்.