தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக சூப்பர் ஸ்டாராகவும் வசூல் மன்னனாகவும் திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். தான் அறிமுகமான 1975 முதல் 80 கள் வரை ரஜினி ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்துக்கொடிருந்த போது முத்துராமன்தான் அவரை கமர்ஷியல் அந்தஸ்துள்ள சூப்பர் ஸ்டார் நடிகராக்கினார்.
80 களுக்கு பிறகு கமல்ஹாசனை மிஞ்சி தமிழ் சினிமாவின் வசூல் மன்னாக மாறினார் ரஜினி. அவரின் தோல்விப் படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது என்பதால் ரஜினியை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போட தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர்.
ஆனாலும் ரஜினியின் வெகு சில படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தன. ராகவேந்திரா, சிவா, வள்ளி, பாபா மற்றும் லிங்கா என்று அந்த வரிசை நீளும். அந்த வரிசையில் ஒரு படம்தான் ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த மாவீரன் திரைப்படமும். தமிழ் சினிமாவில் முதல் முதலாக 70MM பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 1986 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. 70 எம் எம் பிலிமில் படமாக்கப்பட்டதால் படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக எகிறியது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. இத்தனைக்கும் இந்தியில் ஹிட்டான மர்ட் என்ற வெற்றிப்படத்தின் ரீமேக் ஆகும். அப்போது கமர்ஷியல் கிங்காக திகழ்ந்த ராஜசேகர் இந்த படத்தை இயக்கி இருந்தார். ஆனாலும் இந்த படத்தின் கதைப் பிடிக்காத ரசிகர்கள் அதை நிராகரித்தனர்.
வழக்கமான ரஜினி படங்களில் இருக்கும் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இந்த படத்தில் இருந்தது. உதாரணமாக ஒரிஜினல் இந்தி படத்தின் சில காட்சிகளையே தமிழ்ப் படத்திலும் பயன்படுத்தி இருந்தார்கள்.