தமிழ் சினிமாவில் கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டது. அதில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது பாட்ஷா திரைப்படம். அந்த படத்தின் வெற்றியால் அதே திரைக்கதை பார்மட்டில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு நடிகர்களை வைத்து உருவாகின.
இந்த படத்தைத் தயாரித்தது சத்யா மூவிஸ் ஆர் எம் வீரப்பன். இந்த படம் பற்றி ஒரு முறை பேசும் போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பலரும் அறியாத ஒரு தகவலைப் பகிர்ந்தார். அதில் “பாட்ஷாவுக்கு முன்பு வரை ரஜினி சாருக்கு தெலுங்கில் மார்க்கெட்டே இல்லை. அவர் படங்கள் தெலுங்கில் ஓடவே ஓடாது. அதனால் பாட்ஷா படத்தை குறைவான விலைக்குதான் விற்றார்கள். ஆனால் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகுதான் ரஜினி சாருக்கு நிலையான தெலுங்கு மார்க்கெட் உருவானது. எல்லா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டன” எனக் கூறியிருந்தார்.
பாட்ஷாவுக்கு பிறகு ரஜினி சினிமாவில் மட்டும் இல்லாமல், அரசியல் களத்திலும் சூப்பர் ஸ்டார் ஆனார். அப்போது நடந்த ஒரு தேர்தலில் ரஜினியின் ஆதரவால்தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாகக் கூட சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்திய பாட்ஷா படத்தில் பல குறைகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ள விடாத அளவுக்கு ரஜினியின் மாஸும் பரபரப்பான திரைக்கதையும் அமைந்தது.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் ரஜினியும் இணைந்த படங்களில் பாட்ஷா தவிர மற்ற அனைத்துமே சூப்பர்ஹிட்தான். பாம்பேயில் வளர்ந்தவரான சுரேஷ் கிருஷ்ணா தமிழ் படங்களை விட அதிகமாக இந்தி படங்கள்தான் பார்த்து வளர்ந்துள்ளார். அதனால் அவருக்கு அமிதாப் பச்சன்தான் ஆதர்சமான நடிகராம்.
அதனால் தன்னுடைய படங்களில் ரஜினி நடிக்கும் போது அவரிடம் அமிதாப் போன்ற ஒரு ஸ்டைல் வேண்டும் எதிர்பார்ப்பாராம். முக்கியமானக் காட்சிகளை எடுக்கும்போது “இந்தக் காட்சியை அமிதாப் பண்ணியிருந்தால் இப்படி பண்ணியிருப்பார்” என்பாராம்.
அதைக் கேட்ட ரஜினி “எனக்கும் அமிதாப் பச்சன் மிகவும் பிடித்த நடிகர்தான். ஆனால் எனக்கு நடிக்கவே தெரியாது என நினைச்சுகிட்டியா? எனக்கும் ஓரளவுக்கு நடிக்கத் தெரியும்” என்றாராம். இதை ஒரு நேர்காணலில் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.